Tuesday, October 4, 2022

ஏன் எனத் தெரியுமா உங்களுக்கு?

நேற்று ஸ்வான்டே பாபுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

 ஏன் எனத் தெரியுமா உங்களுக்கு? 

தற்கால மனிதனை  ஒத்த  ஒரு இனம் பூமியில் வாழ்ந்துள்ளது. இதன் பெயர்  நியான்டர்தல் (Neanderthals). இவர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு வாழ்ந்துள்ளனர். இவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே தோற்றியுள்ளனர். பின்னர்  சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் மனித இனம் (Homo sapiens)
ஆப்பிரிக்காவில் தோன்றியது. பின்னர் சுமார் மனித இனம் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டுப் பிற கண்டங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தனர். பின்னர் என்ன நடந்தது எனச் சரியாகத் தெரியவில்லை. நியான்டர்தல் இனம் மக்கள் படிப்படியாக இந்த பூமியில் வாழமுடியாமல் அழிந்து போனார்கள். ஆனாலும் மரபணு சோதனைகள் செய்ததில் ஒரு ஆச்சரியத்தை உணர்ந்தனர். ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்தில் வாழும் மக்களிடையே நியான்டர்தல் இன மரபணு 4 விழுக்காடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தற்கால மனித இனத்துடன் நியான்டர்தல் இனம் இணைந்து ஒன்றரக் கலந்து விட்டதாகப் புரிந்து கொள்ளலாம். 

இந்தச் சூழலில்  ஸ்வான்டே பாபு (Svante Pääbo) மற்றும் அவரின் கூட்டாளிகள் சேர்ந்து பண்டைய மனித இனத்தை ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் சைபிரியா பகுதிகளில் இந்த ஆராய்ச்சியை மேற் கொண்டனர். காரணம் இந்த பகுதிகளில்  மனித எலும்புகள் மட்டும் அல்ல எந்த உயிரினத்தின் எலும்பாக இருந்தாலும் நீண்ட காலம் சேதமடையாமல் இருக்கும். அதனில் இருந்து எளிதில் மரபணுவைப் பிரித்தெடுக்க முடியும். ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் கிடைக்கும் பண்டைய எலும்புகளிலிருந்து மரபணு பிரித்தெடுப்பது சற்று கடினமானது. காரணம் இங்கு இருக்கும் சாதகமான வெப்பநிலையில் எலும்புகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் தின்றுதீர்க்கப் படும். சைபீரியாவில் உள்ள கடும் குளிரில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் கொட்டம் அடக்கப்படும். அதனால் பண்டைய எலும்புத் துண்டுகளிலிருந்து எளிதில் மரபணுவான DNAவை பிரித்தெடுக்க முடியும். 

பாபு மற்றும் அவரின் கூட்டாளிகள் சைபிரியாவில் ஒரு மனிதனை ஒத்த உடம்பின் விரல் ஒன்றைக் கண்டறிந்தனர். அந்த இனம் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது எனக் கண்டறிந்துள்ளனர்.  அந்த விரலின் எலும்பிலிருந்து மரபணுவான DNAவை பிரித்தெடுத்து ஆய்வு செய்தார். இந்த ஆராய்ச்சியின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. காரணம் அந்த விரல் தற்கால மனிதனுடையது இல்லை. மேலும் நியான்டர்தல் இனத்தைச் சார்ந்ததுவும் இல்லை ! ஏன் மனிதனுக்குச் சகோதரனான மனித  ( சிம்பனிசி) குரங்குகளுடையதும்   இல்லை ! இந்த விரல் இதுவரை கண்டறியாத ஒரு புது மனித இனத்துடையது எனக் கண்டறியப்பட்டது. அந்த இனத்திற்கு  டெனிசோவான்ஸ் (Denisovans) எனப் பெயரிட்டனர்.  இந்த இனத்தின் மரபணு கிழக்கு ஆசிய மக்களின் மரபணுவில் சுமார் 6 விழுக்காடு கலந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். 

ஆக, மூன்று முக்கிய மனித இனங்கள் இருந்துள்ளன. அவைகள் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன என்பதே இவர்களின் கண்டுபிடிப்பு. இதற்காகவே ஸ்வான்டி பாபுக்கு நேற்று இரவு (04/10/22)  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர் ஆவர். நோபல் வழங்கும் நாடும் சுவிடன்தான். ஆனால் இவர் ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சியகத்தில் இயக்குநராகப் பணிபுரிகின்றார்.

Saturday, October 1, 2022

நான் ஏய்ச்ச நரி தண்ணீர் குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?

‘நான் ஏய்ச்ச நரி தண்ணீர் குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’
என்று ஒரு சொலவடை இருக்கு.
 
‘ஏய்ச்ச’ என்றால் ஏமாற்றிய என்று அர்த்தம்.

ஆடுமேய்க்கும் ஒருவன் ஆட்டுப்பட்டி அருகே அமர்ந்திருந்தான். கோடைகாலத்தில் தாகமெடுத்த நரி ஒன்று தண்ணீர் தேடி அந்த பக்கமாக வந்தது.  

நரி ஆடு மேய்ப்பவனிடம் தண்ணீர் எங்காவது கிடைக்குமா? என்று கேட்டது.

ஆட்டுத் தொழுவத்தில் தண்ணீர் இருந்தது. ஆனால் நரியை அங்கு குடிக்கச் சொன்னால் தனது தந்திரத்தை பயன்படுத்தி ஆடுகளை இழுத்துக் கொண்டு ஓடிவிடும் என்று நினைத்தான்.

சற்று யோசித்து விட்டு நரியிடம் பேசினார்.
“இந்த திசையில் நேராகப் பார். அங்கு தண்ணீர் ஆறாக ஓடுகிறது. நீ அங்கு சென்றால் தண்ணீர் குடிக்கலாம்.” என்றார்.

ஆனால் உண்மையில் அங்கு ஓடியது ஆறு இல்லை. அது கோடைகாலத்தில் தோன்றும்  கானல் நீர்.

நரி தாகம் தீரப்போகும் ஆசையில் துள்ளிக் குதித்து ஓடியது. ஆனால் தூரத்தில் இருந்து பார்த்த இடத்தில் நீரோட்டம் இல்லை. ஆனால் இன்னும் தூரத்தில் கானல் நீர் ஓடிக்கொண்டிருந்தது.

நரிக்கு அது நீரோட்டம் போல் தெரிந்தது. அங்கும் ஓடிச் சென்று பார்த்தது. ஏமாந்து போனது.

கானல் நீர் தனக்கு குடிக்க கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நரி ஓடிக்கொண்டே இருந்தது. 
 
தந்திரத்திற்கு பெயர் போன நரியையே ஏமாற்றிய தந்திரக்காரனைப் பற்றிய சொலவடை தான்
‘நான் ஏய்ச்ச நரி தண்ணீர் குடிக்காம அலையுது. நீ என்னய ஏய்க்கப் பாக்குறீயா?’

‘நான் ஏமாற்றிய நரியே இன்னும் தண்ணீர் குடிக்காமல் அலைகிறது. அப்பேர்ப்பட்ட என்னை நீ ஏமாற்ற நினைக்கிறாயா?’ என்பது தான் அதன் பொருள்.

ஒருவரை எளிதாக ஏமாற்ற முடியாது என அவர் நினைக்கும் போது இந்த சொலவடையை கூறலாம். 
தமிழில் இதுபோல ஏராளமான சொலவடைகள் இருக்கின்றன. ஒரு பெரிய கதையினை இரு வரிகளில் மடித்து வைக்கப்பட்டிருப்பது தமிழின் அழகு. 

வெயில் காலங்களில் நேராக சென்று கொண்டிருக்கும் ரோட்டில் தூரமாக பார்த்தால் கானல் நீர் உங்களுக்கு தெரியும். 

மரம் போன்ற உயரமான பொருள்களிலிருந்து வரும் ஒளி தரையை நோக்கிக் செல்லச்செல்ல காற்றின் வெவ்வேறு அடுக்குகளில் முழு அக எதிரொளிப்பு அடையும்.

இதனால் ஒளி தரையின் அடியிலிருந்து வருவது போன்ற ஓர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும். காற்று அடுக்குகளின் அசையும் தன்மையினால் நீர் நிலையில் இருந்து எதிரொளிப்பது போன்று தெரியும். அல்லது பொருளுக்கு அடியில் ஈரப்பரப்பு உள்ளது போனறு தெரிவதைத் தான் கானல் நீர் என்று அழைக்கிறோம்.

அந்த கானல் நீர் பற்றி இந்த சொலவடையில் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கின்றனர் பார்த்தீர்களா!.