Friday, January 20, 2023

இயற்பியல் தத்துவத்தினை பயன்படுத்தி கிமு 2500 ஆம் ஆண்டுகளில் எகிப்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த மருத்துவ சிகிச்சை முறை.

குறைவெப்ப மருத்துவம்  (cryotherapy)

காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதை நினைத்தாலே சிலருக்கு கால்கள் நடுங்கும். சிலருக்கு மார்கழி மாதத்தின் இரவுகளை கம்பளி போர்வைகள் இல்லாமல் கடக்க முடியாது. ஆனால் பனிப் பொழிவையும் கண்டுகொள்ளாமல் கடந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். குளிர் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. அப்படியென்றால் குளிரை வரையறுக்க முடியுமா?  ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தால் தான் அந்த சூழல் குளிராக இருக்கும் என எந்த விதியிலும் குறிப்பிடப்படவில்லை.  ஆனாலும் நீரானது தனது உறை நிலைப் புள்ளியான 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை நோக்கிச் செல்லும் போது அது குளிர் சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

நாம் எல்லோரும் குளிரை கடந்து செல்லவே விரும்புகிறோம். குளிர் நம் உடலை தாக்கும் போது அதனை போர்வை, வெப்பம் போன்றவைகளை பயன்படுத்தி அதனை விரட்டி விடுகிறோம். ஆனால் இந்த குளிரைப் பயன்படுத்தி பல விதமான நோய்களை தீர்ப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனால் இது உண்மை. குளிரைப் பயன்படுத்தி பலவிதமான நோய்களை தீர்க்கும் முறைக்கு குறைவெப்ப மருத்துவம்  (cryotherapy) என்று பெயர். இந்த வளர்ந்து வரும் மருத்துவ முறை எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.

அதிகாலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதை மனம் விரும்பாது. ஆனால் அதையும் தாண்டி நீங்கள் குளித்து விட்டால், குளித்து முடித்த பின் ஒரு வகையான புத்துணர்ச்சி உங்களின் உடலுக்குள் ஓடுவதை பார்க்கலாம். இந்த புத்துணர்ச்சி எப்படி வருகிறது?

இந்த உலகில் இருக்கும் பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனது. அனைத்து அணுக்களும் 0 கெல்வினில் (-273.15 டிகிரி செல்சியஸ்) அதிர்வடையாமல் அமைதியாக ஓய்வெடுக்கும். அணுக்கள் இயங்காமல் இருப்பதால் அதற்கு இயக்க ஆற்றல் இருக்காது. ஒரு பொருளிலுள்ள மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் தான் அந்த பொருளின் வெப்பநிலையை தீர்மானிக்கும். அதிக வெப்பநிலையில் இருக்கும் பொருள்களில் இருக்கும்  அணுக்களின் இயக்க ஆற்றல் அதிகமாக இருக்கும். 

உதாரணமாக ஐஸ்கட்டியில் இருக்கும் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் நீர் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலை விட குறைவாகவே இருக்கும். வெப்பநிலை குறைய குறைய மூலக்கூறுகளின் இயக்கம் குறையத் தொடங்கும்.  வெப்பநிலை அதிகரிக்கும் போது மூலக்கூறுகளின் வேகம் அதிகரிக்கும். இந்த தத்தும் தான் குறைவெப்ப சிகிட்சை முறையில் பயன்படுகிறது. இந்த தத்துவத்தினைப் பயன்படுத்தி குறைவெப்ப மருத்துவத்தில் நம் உடலில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்கிறார்கள்.   

எப்படி வேலை செய்கிறது:

மேல் பகுதியில் திறந்திருக்கும் குழாய் போன்ற ஒரு பெரிய அறையில் சிகிட்சையளிப்பவரை நிற்க வைப்பார்கள். இந்த குழாய்க்கு கிரையோசானா (cryosauna) என்று பெயர்.  அவருடைய தலைப்பகுதி கிரையோசானாவுக்கு  வெளியில் தெரியுமாறு  நிற்க வைப்பார்கள். திரவ நைட்ரஜனை பயன்படுத்தி  குழாயினுள் -120 டிகிரி செல்சியஸ் முதல் – 250 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் இருக்கும் குளிர்ந்த ஆவியினை செலுத்துவார்கள். இதன் விளைவாக, தலை சாதாரண அறை வெப்பநிலையில் இருக்கும் போது, உடல் மற்றும் கீழ் உடல் குளிர்ந்த வெப்பநிலையில் இருக்கும். இந்த கடுங்குளிரை தாங்கிக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.  

குளிர்ந்த ஆவி அந்த அறையை குளிர்விக்கும். நோயாளியை இந்த கடுங்குளிரில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மட்டுமே நிற்க வைப்பார்கள். அவர் உடல் வியாதிக்கு தகுந்தபடி எத்தனை முறை இந்த சிகிட்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அங்கிருக்கும் மருத்துவர் முடிவு செய்வார். 

கடுங்குளிரில் ஒருவரை நிற்க வைக்கும் போது அவருடைய இரத்த நாளங்கள் சுருங்குகிறது. அவருடைய மூளையிலிருக்கும்  சென்சார்கள் கடுமையான குளிரை உணரும் போது, உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு  இரத்தம் உடற்பகுதிக்கு பாய்கிறது. இரண்டு  நிமிடங்கள் கழித்து நீங்கள் அறையை விட்டு வெளியே வரும் போது ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் உடல் உறுப்புகளுக்கு விரைந்து செல்லத் தொடங்குகிறது. இதனால் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கிறது. இது குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவுகிறது. 

வலியிருக்கும் பகுதியினை இந்த சிகிட்சைக்கு உட்படுத்தும் போது வலிகள் நீங்கி விடுகின்றன. மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவைகளை இரண்டு மூன்று அமர்வுகளில் முழுவதுமாக நீங்கி விடுகிறது.  இரத்த ஓட்டமில்லாமல் இருக்கும் பகுதிகளுக்கும், இரத்த ஓட்டம் குறிவாக இருக்கும் பகுதிகளுக்கும் முழுவதுமாக இரத்த ஓட்டம் நடைபெறுவதற்கு இது வழிவகுக்கிறது. இந்த சிகிட்சையின் மூலம் எந்தெந்த இடங்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருந்ததோ அந்த இடங்களில் இரத்த ஓட்டம் அதிகமாகும். 

உடல் சரும பராமரிப்புக்கு இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த சிகிட்சை மூலம் சருமத்தின் இயற்கையான நெகிழ்ச்சி மற்றும் இளமை தோற்றத்தை மீட்டெடுக்கலாம். உடல் வலியைக் குறைப்பதற்கும் இந்த சிகிட்சை பயன்படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்களுடைய உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கும் இந்த சிகிச்சையினை செய்கிறார்கள். 

கிரையோதெரபியைப் பயன்படுத்தி தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கலாம். மருத்துவர் திரவ நைட்ரஜனை புற்றுநோய் பகுதியில் செலுத்துவார். திரவ நைட்ரஜன் மிகவும் குளிர்ச்சியானது. புற்று நோய் செல்களால் இந்த கடுமையான குளிரைத் தாங்க முடியாது. இதனால்  சிகிச்சைக்குப் பிறகு புற்று நோய் செல்கள் இறக்கின்றன. மேலும் அது புற்று நோய் செல்கள் இருக்கும் பகுதியை உறைய வைத்து  அந்த இடத்தில் ஒரு பொருக்கினை உருவாகிறது. ஒரு சில நாளில் இந்த பொருக்கு புற்றுநோய் செல்களுடன் சேர்ந்து கீழே விழுந்து விடுகிறது. 

இயற்பியல் தத்துவத்தினை பயன்படுத்தி கிமு 2500 ஆம் ஆண்டுகளில் எகிப்தியர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த  இந்த   குறைவெப்ப மருத்துவ சிகிச்சை முறை  தற்போது நவீனப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பெரும்பாலான நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையிலும் இந்த வகை சிகிட்சை முறை இருக்கிறது.

No comments:

Post a Comment